13 November 2025

இலங்கை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் விஞ்ஞான முன்னேற்றத்திற்கான உலக விஞ்ஞான கல்லூரி (TWAS) ஆகியவை இணைந்து நடாத்தும் விஞ்ஞான இராஜதந்திர மன்றம் 2025

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் விஞ்ஞான முன்னேற்றத்திற்கான உலக விஞ்ஞான கல்லூரி (TWAS) ஆகியவற்றுடன் இணைந்து, "விஞ்ஞான-இராஜதந்திரத்தின் விஞ்ஞான-கொள்கை இடைமுகத்தில் தகவலறிந்த தீர்மானமெடுப்பதில் இராஜதந்திரத்தின் பங்கு " என்ற தலைப்பில் மன்ற விவாதமொன்றை 2025, நவம்பர் 10 அன்று வெற்றிகரமாக நடத்தியது. இந்நிகழ்வு, 2025 இன் விஞ்ஞான வாரத்தின் போது தேசிய விஞ்ஞான தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டதுடன், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், இராஜதந்திர பணியகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 80 க்கும் மேற்பட்ட நேரடி பங்கேற்பாளர்களையும் 200 க்கும் மேற்பட்ட மெய்நிகர் அடிப்படையிலான பங்கேற்பாளர்களையும் ஒன்றிணைத்தது.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செய்யலாளர், திரு. வை.எல்.நவவி அவர்களின் கருத்துக்களுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சார்பாக, அமைச்சின் தெற்காசியா - சார்க் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பத்திரன ஆகியோரால்  சம்மேளன விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.

மலேசியப் பிரதமரின் முன்னாள் விஞ்ஞான ஆலோசகரும், கௌரவ ஓய்வுபெற்ற பேராசிரியரும், கலாநிதியுமான டான் ஸ்ரீ ஸ(z)க்ரி அப்துல் ஹமீத், நிலைபேறான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் சர்வதேச கூட்டாண்மைகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பிரதான உரையை நிகழ்த்தினார். புது டில்லிக்கான யுனேஸ்கோ இயக்குனர் திமோதி கர்டிஸ், வளர்ந்துவரும் நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மையில் யுனெஸ்கோவின் பங்கை எடுத்துக்காட்டியதுடன்,  நிலைபேறான வளர்ச்சிக்கு சர்வதேச விஞ்ஞான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து பேசினார். இத்தொழிநுட்ப அமர்வில் கலந்துகொண்ட இலங்கை தேசிய விஞ்ஞான அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் கலாநதி சிரிமாலி பெர்னாண்டோ தேசிய ஆராய்ச்சி முன்னுரிமைகளை நிலைபேறான வளர்ச்சி நோக்கங்களுடன் இணைப்பது குறித்த நுண்ணறிவுகள் குறித்தும், யுனெஸ்கோ- விஞ்ஞானங்களுக்கான அகில உலக கல்லூரியின் நிர்வாகப் பணிப்பாளரும், பேராசிரியருமான மார்செலோ நோபல் தகவலறிந்து தீர்மானமெடுப்பதை ஆதரிப்பதில் விஞ்ஞான இராஜதந்திரத்தின் தாக்கம் குறித்தும், கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

“தேசிய அபிவிருத்தி இலக்குகளுக்கான விஞ்ஞான கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படாத மென்சக்தி மற்றும் ஒத்துழைப்புசார் சாத்தியக்கூறு” என்ற தலைப்பில் குழு விவாதமொன்றும் நடத்தப்பட்டது. குழு உறுப்பினர்களில் கலாநிதி சிரிமாலி பெர்னாண்டோ, பேராசிரியர் மார்செலோ நோபல், பணிப்பாளர் நாயகம் சமந்த பத்திரன, யுனெஸ்கோ மதன்ஜீத் சிங் தெற்காசிய நீர் முகாமைத்துவ மையத்தின் (UMCSAWM) பணிப்பாளரும், மையத் தலைவருமான பேராசிரியர் லலித் ராஜபக்ஷ, கல்லூரிகளுக்கிடையிலான கூட்டாண்மை (IAP) ஒருங்கிணைப்பாளர் கலாநிதி பீட்டர் மெக்ராத், மற்றும் சீனாவின் உயர்தரத்திற்கான தேசிய புத்தாக்க மையத்தின் (NICE) பணிப்பாளர் கலாநிதி பென்ஜின் லுவோ ஆகியோர் அடங்குவர். இக்கலந்தாலோசனைகள் பல்வேறு துறைகளுக்கு இடையேயான உரையாடலின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகளாவிய கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கான மென்சக்திக்கான வழிமுறையாக விஞ்ஞான இராஜதந்திரத்தின் திறனை எடுத்துக்காட்டியது. இந்த அமர்வை சர்வதேச அரசாங்க விஞ்ஞான ஆலோசனை வலையமைப்பின் (INGSA) உறுப்பினரும் AAAS-TWAS விஞ்ஞான இராஜதந்திர திட்டத்தின் முன்னாள் மாணவருமான செயத் சஹ்மி நெறியாழ்கை செய்தார். குழு விவாதத்தினைத்தொடர்ந்து, கலாநிதி பீட்டர் மெக்ராத், விஞ்ஞான இராஜதந்திரத்தில் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அண்மிய எதிர்கால நடவடிக்கைகளை வழிநடத்தும் பரிந்துரைகளின் தொகுப்பைக் கொண்ட கொள்கைச் சுருக்கத்தை உருவாக்குவதில் இம்மன்றம் பரிபூரண நிறைவை எட்டியதுடன், இது விரைவில் செயற்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்படும். முக்கிய விளைவுகளில் விஞ்ஞான இராஜதந்திரம் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வுத் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான தீர்மானமும், இலக்கு அடிப்படையிலான பயிற்சி முயற்சிகள் மூலம் அதன் நோக்கத்தை விரிவுபடுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு 
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 நவம்பர் 13