ஜப்பானிய பேரிடர் நிவாரணக்குழுவின் (மருத்துவக் குழு) அமைச்சக அதிகாரிகளுடனான சந்திப்பு
ஜப்பான் பேரிடர் நிவாரண (JDR) மருத்துவக் குழுவின் தலைவரான இவாசே கிச்சிரோ, கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சாவித்ரி பானபொக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அவசரகால பதிலளிப்பு பிரிவின் தலைவர் மற்றும் பொது இராஜதந்திரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு பிரிவுகளின் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ ஆகியோரை இன்று (2025 டிசம்பர் 15) மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். ஜப்பான் பேரிடர் நிவாரண மருத்துவக் குழுவின் பிரதிநிதிகள், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் ஜப்பான் தூதரக அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக 31 உறுப்பினர்களைக் கொண்ட பேரிடர் நிவாரணக் குழு இலங்கை வந்தடையச் செய்ததில் ஜப்பான் அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கை குறித்து, பணிப்பாளர் நாயகம் பானபொக்க பாராட்டியதுடன், தித்வா சூறாவளிக்குப் பிறகு ஜப்பானின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.
ஜப்பான் பேரிடர் நிவாரண மருத்துவக் குழுவின் தலைவர் இவாசே கிச்சிரோ, குழுவின் பணியமர்த்தலின் போது வழங்கப்பட்ட ஆதரவிற்காக அமைச்சிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார். இத்தகைய ஆதரவு இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளைப் பிரதிபலிக்கிறது என்பது மேலதிகச் சிறப்பம்சமாகும்.
தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட பணிப்பாளர் நாயகம் ரொட்ரிகோ, இலங்கையின் பேரிடர் முகாமைத்துவ மையம் (DMC) மற்றும் வானிலை ஆய்வுத் திணைக்களத்துக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டார்; இதில் முன்னெச்சரிக்கை முறைமைகளை வழங்குவதும் அடங்கும்.
ஜப்பான் பேரிடர் நிவாரண மருத்துவக் குழுவின் பிரதிநிதிகள் இலங்கையில் அவர்களின் மருத்துவ நடவடிக்கைகள் குறித்த சுருக்கமான அறிக்கையை அமைச்சில் சமர்ப்பித்தனர்.
சிலாபத்தில் மருத்துவ நடவடிக்கைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜப்பான் பேரிடர் நிவாரண மருத்துவக் குழு 2025, டிசம்பர் 16 அன்று ஜப்பானுக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 டிசம்பர் 15

