12 December 2025

இலங்கை மற்றும் இத்தாலி ஆகியவற்றுக்கிடையிலான சாரதி உரிமைப்பத்திரங்களின் பரஸ்பரரீதியிலான அங்கீகாரத்திற்கான இருதரப்பு ஒப்பந்தத்தின் புதுப்பிப்பு

இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான சாரதி உரிமைப் பத்திரங்களை பரஸ்பரரீதியில் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கமும், இத்தாலி அரசாங்கமும் 2025, டிசம்பர் 12 ஆகிய வெள்ளிக்கிழமை அன்று இத்தாலியின் ரோமில் முறையாகப் புதுப்பித்தன. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரோட்ரிகோ இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அதேவேளை, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சரும், துணைச் செயலாளருமான மரியா த்ரிபோடி இத்தாலி அரசாங்கத்தின் சார்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானமையானது, 2021 இல் காலாவதியானதிலிருந்து ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான இரு நாடுகளின் மோட்டார் போக்குவரத்து / போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை செயன்முறையின் சுமுகமானதும், சாதகமானதுமான நிறைவைக் குறிக்கிறது. சாரதி உரிமைப்பத்திர ஒப்பந்தம் ஒவ்வொரு நாட்டிலும் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றவர்கள் செல்லுபடியாகும் சாரதி உரிமைப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு உதவுகிறது. இந்த ஒப்பந்தம் முதன்முதலில் இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் 2011 இல் கைச்சாத்தானதுடன், 2021 இல் காலாவதியாவதற்கு முன்பு 2016 இல் புதுப்பிக்கப்பட்டது.

இவ்வொப்பந்தத்தின் கீழ், ஆறு ஆண்டுகளுக்குள் உரிய நாடுகளில் வசிப்போர், தத்துவார்த்த மற்றும் செயன்முறைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், தங்கள் தேசிய சாரதி உரிமைப் பத்திரத்தை மற்றொரு நாட்டில் பயன்படுத்தக்கூடியவாறு மாற்றிக்கொள்ள தகுதியுடையவர்கள். இவ்வசதி இத்தாலியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பாரியளவிலான இலங்கை சமூகத்தினரால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளதுடன், மேம்பட்ட வேலை வாய்ப்புகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புக்களுக்கு உதவியுள்ளமையானது, இத்தாலியில் வினைத்திறன்மிக்கதொரு வெளிநாட்டு சமூகமாக அவர்களின் பங்களிப்பை எளிதாக்குகிறது. 
இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இரு அரசாங்கங்களாலும் அங்கீகரிக்கப்பட்டவுடன், இந்த ஒப்பந்தம் 60 நாட்களுக்குள் அமுலுக்கு வரும். ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் இரு தரப்பினரும் அறிவிப்பொன்றை வெளியிடுவார்கள்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு 
கொழும்பு 
2025 டிசம்பர் 12