வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் யாங் வாங்மின்னின் அமைச்சர் விஜித ஹேரத்துடனான சந்திப்பு
வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் (CPAFFC) தலைவர் யாங் வாங்மின், 2025, டிசம்பர் 12 வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
முழு நாட்டையும் பாதித்த சமீபத்திய பாதகமான வானிலைக்குப் பிறகு இலங்கைக்கு வழங்கப்பட்ட உறுதியானதும், பெறுமதிமிக்கதுமான ஆதரவிற்காக சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கையில் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கம் 500,000 RMB சீன யென்களை வழங்க உறுதியளித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான இருதரப்பு உறவுகளுக்கு சான்றாவதாகவும், எதிர்காலத்தில் இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை உறுதிபூண்டுள்ளது என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் திறமையான தலைமைதத்துவத்தின் கீழ், இலங்கை செவ்வனே மீண்டு, வலுவாக மீளக் கட்டியெழுப்பப்படும் என்று வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் நம்பிக்கை தெரிவித்ததுடன், இந்த முயற்சிகளுக்கு சீனாவின் ஆதரவை வெளிப்படுத்தினார். இளைஞர் பரிமாற்றங்கள் உட்பட, நகர திட்டமிடலில் உதவுவதற்கும், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கும் வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் நோக்கத்தை அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ, இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ ஜென்ஹோங் மற்றும் கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம், வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கம் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 டிசம்பர் 15

